Wednesday, May 14, 2008


குருவி
- தவறவிடக்கூடாத திரைப்படம் - சில காரணங்கள்

குருவியைப் பற்றி வலையுலகம் முழுதும் நெகட்டிவ் விமர்சனங்கள். பார்த்தவர்கள் அனைவரும் டரியலாகிப் போயிருக்கிறார்கள். ஆனால் குருவி அப்படி ஒன்றும் பார்க்கவே கூடாத ஒதுக்க வேண்டிய திரைப்படம் அல்ல. இத்திரைப்படத்தைக் கேவலம் என்று சொல்லி கேவலத்தையே கேவலப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் குருவி அனைவராலும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.

- படத்தின் நகைச்சுவை காட்சிகள். சின்னக் கலைவாணர் விவேக் மாங்கு மாங்குன்னு டபுள் மீனிங் டயலாக்கா பேசிட்டிருந்தாலும் சிரிப்பே வரல. ஆனா நம்ம இளைய தளபதி அசால்டா காமெடி பண்றாரு. தோளைக் குலுக்கி கண்ணடிச்சா காமெடி. திரிசாவை முறைச்சா காமெடி. அதைவிட சண்டை போடும்போது சட்டையைக் கழட்டிப் போட்டு கையை முறுக்கி காட்டுவாரு பாருங்க..அந்த ஒரு காமெடி சீனுக்காகவே படம் பாக்கலாம்

- எதிர்பாராத திருப்பங்கள். விஜய் நாலாவது மாடியில இருப்பாரு. வில்லனோட அடியாளுங்க துரத்திட்டு வருவாங்க. பக்கத்து மேம்பாலத்து டிராக்ல தூரத்துல டிரெயினைக் காட்டுவாங்க. இளைய தளபதியோட முகத்தைக் காட்டுவாங்க. டிரெயினு..முகம்..முகம்..டிரெயினு. இப்ப நீங்க என்ன நினைப்பீங்க? இளைய தளபதி நேரா அந்த டிரெயின் மேல குதிப்பாருன்னு தானே? அங்க தான் ஒரு டிவிஸ்டு. நம்ம தலைவர் அந்த நாலாவது மாடியிலருந்து பாலத்துல குதிச்சு கைப்புடி சுவரைப் புடிச்சு தட்டுத்தடுமாறி டிராக்ல ஏறி ஓடற டிரெயின்ல ரன்னிங்க்ல ஏறுவாரு. இப்படி ஏகப்பட்ட டிவிஸ்டோ டிவிஸ்ட் இருக்க படம் இது.

- செண்டிமெண்ட். பத்து வயசு பையன் வில்லனோட காலைப் பிடிச்சு விடறது, கண் தெரியாத இளம்பெண்ணின் சகோதரனை வில்லன் கொல்வது, மகன் வந்து காப்பாற்றுவான் என்று தந்தை சபதம் செய்வது என்று தமிழ்திரைப்படங்களில் இதுவரை பார்த்திராத செண்டிமெண்ட் காட்சிகள் நிறைந்த படம்.


- மெசேஜ். படத்துல சின்ன பசங்களுக்கு நிறைய புத்திமதி சொல்வாரு இளைய தளபதி. உதாரணமா பற்களை பலமா வச்சுக்கறதுக்கான அவசியத்தை சூசகமா சொல்லியிருக்காரு. ஆக்ஸிலரேட்டர் கட்டானாலும் வாயில ஒயரை கடிச்சிக்கிட்டு ரேஸ் ஜெயிக்கறாரு நம்ம தலைவரு. பற்கள் மட்டுமில்லாம நம்ம மனசும் பலமா இருந்தா எந்த மொக்க நாயும் ரேஸ்ல ஜெயிக்கலாம்ன்றது தான் மெசெஜு. இதுமாதிரி படம் முழுக்க மெசெஜ் தான்

- இளைய தளபதியின் கெட்டப்புகள். குருவி விஜய் 'மாஸ்க் ஆப் சாரோ' ஆண்டனியோ பாண்டராஸே காலில் விழும் அளவுக்கு முகமூடி அணிந்து வரும் காட்சியில் அது விஜய் தானா என்று யாராலுமே கண்டுபிடிக்க முடியவில்லை. மச்சம், மீசை என்று மாறுவேடத்திற்கு மெனக்கெட்டிருந்த தமிழ் சினிமாவிற்கு நாலுநாள் தாடியே போதும் என்று 'அழகிய தமிழ் மகனில்' நிருபித்த இளைய தளபதி குருவியில் அதுகூட தேவையில்லை என்று அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளார். தசாவதாரத்தில் பத்து கெட்டப் போடும் கமல்ஹாசன் விஜயிடம் கற்றுக்கொள்ள நிறைய உள்ளது.

- பல்வேறு கலாச்சாரங்களை பதிவாக்கியிருக்கும் திரைப்படம். மலேசியா, தமிழ்நாடு, ஆந்திரா என்று பல்வேறு கலாச்சாரங்களையும் மக்களின் வாழ்வையும் நேர்மையாக பதிவு செய்துள்ள திரைப்படம்

- நேட்டிவிட்டி. மலேசியாவில் இருக்கும் திரிசா 'லா' போட்டுத்தான் பேசுவார். ஆந்திரா கடப்பாவிலிருக்கும் வில்லன் ஆஷிஷ் வித்தியார்த்தி 'லு' போட்டு தெலுங்கில் தான் பேசுவார் (இவர் எப்போ தான் தமிழ் பேசி நடிப்பாரோ). அதே போல் வில்லனின் அடியாட்களும் தெலுங்கில் தான் பேசுவார்கள். இவ்வாறு யதார்த்தமாக நேட்டிவிட்டியுடன் எடுக்கப்பட்ட திரைப்படம் குருவி.

- ரவுடிகள் ஒழிப்பு. தமிழ்நாட்டுலயும் ஆந்திராவுலயும் மட்டுமில்லாம மலேசியாவுக்கு போய் அங்கேயும் தனியாளா ரவுடிகளை அடிச்சு துவம்சம் பண்ண குருவியை விட்டா யார் இருக்கா?

- இந்த படத்தைப் பார்த்தால் உங்களுக்கு கோபம், வெறுப்பு, ரென்சன் எல்லாமே போயிடும். உங்களுக்கு ஒரு சென்ஸும் இருக்காது. ஏன்னா இது ஒரு மிகச்சிறந்த சென்ஸ்லெஸ் திரைப்படம்.

- தன்னம்பிக்கை ஊட்டும் திரைப்படம். "குருவி மாதிரி ஒருத்தனே இந்த உலகத்துல இருக்கான். நமக்கென்ன"ன்னு ஓவ்வொருத்தருக்கும் தன்னம்பிக்கையை டன் கணக்கில் ஏற்றிவிடும் வெற்றித்திரைப்படம் குருவி.

- தொழில்நுட்பம்/ மருத்துவம் கற்பிக்கும் திரைப்படம். வெப் காமிராவே விஜயைப் பார்த்து கன்பீஸ் ஆவதும், இண்டர்நெட்டு ஈமெயில் மூலமாக விஜய் வில்லன்களை போலீஸிடம் மாட்டிவிடுவதும், வெப்காமிரா டிராலியில் சுத்துவதும் பாமரர்க்கும் நவீன தொழில்நுட்பங்களைக் கற்றுத்தரும் -புனைவு திரைப்படம். ஒரு ஒயரை அசைத்தால் கோமாவிற்கு போவதும் அதே ஒயரை அசைத்தால் கோமாவிலிருந்து மீண்டு வருவதும் மருத்துவ அதிசயங்கள்.

- கட்டமைக்கப்பட்ட பாரம்பரியங்களை உடைத்தெறியும் புரட்சித் திரைப்படம். மொத்த திரைப்படத்தையும் பார்த்தாலே உங்களுக்குத் தானாக புரியும்.

- இரண்டு பேரரசு, இரண்டு பி.வாசு, இரண்டு ஸ்ரீகாந்த் தேவா, இரண்டு விஜய் இணைந்து படமெடுத்தால் எவ்வளவு சிறப்பாக வருமோ அதை விடவும் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் இது.

- காமெடி, டிராஜடி, ரொமான்ஸ், டிராமா, ஆக்ஷன் என்று எந்த வகையிலும் பிரிக்க முடியாத திரைப்படம் இது. பார்ப்பவர்கள் இத்திரைப்படத்தை அவரவர்க்கு ஏற்றவாறு கொள்ளலாம். அப்படி அனைத்தும் கலந்த கலவை இத்திரைக்காவியம்.

- இந்த படத்தை பார்த்துவிட்டால் வேறு எந்த படமாக இருந்தாலும் பிடித்துவிடும்.

- எல்லாவற்றிற்கும் மேலாக இத்திரைப்படம் உங்கள் பொறுமையையும் சகிப்புத்தன்மையையும் கூட்ட மிகச் சிறந்த மருந்து. இந்த படத்தை பார்த்துட்டீங்கன்னா அப்புறம் வாழ்க்கையில எதுவுமே கொடுமையா தெரியாது.

இந்த திரைக்காவியத்தைப் பார்க்க இதைவிட காரணம் வேண்டுமா என்ன? கண்டிப்பா பாருங்க மக்களே. குருவி 'நாமம்' வாழ்க!!


நல்லாயிருங்க!!


Disclaimer:
I am not the owner for the above article about this movie 'Kuruvi'. Looks like this article depicts the movie better than the movie by itself.